சோலையின் நோக்கம்

தமிழையும், சங்க இலக்கியங்களையும் பாமரனும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைக்க முயல்வதே சோலையின் நோக்கம்.

இன்றைய முழக்கம்

“செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே” புறநானூறு.189

Wednesday, October 13, 2010

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 8

ஏழாம் முழக்கத்தின் அறிக்கை....

          நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் ஏழாவது சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கம்  03/10/10 ஞாய்ற்றுக் கிழமை அன்று சென்னை கலைஞர் நகரில் உள்ள சிவன் பூங்காவில் நடைபெற்றது.

             முழக்கத்தின் தொடக்கத்தில்  நெய்தலங்கானல் பைந்தமிழ்ச் சோலையின் பொதுச்செயலாளர்  ப. பானுமதி, முழக்கத்திற்கு வருகை தந்திருந்த சிறப்புப் பேச்சாளர் உள்ளிட்ட அனைவரையும்  முறையாக வரவேற்றார்.

            அடுத்ததாக இம் முழக்கத்திற்கு முன்னிலை வகித்த பேரா. முனைவர். சேதுராமலிங்கம் (இன எழுச்சிக் கவிஞர் நெல்லை இராமச்சந்திரன் அவர்களால் தவிர்க்க முடியாத சூழலால் முன்னிலை வகிக்க முடியாது போனது)  நகைச்சுவை பற்றி சிறு குறிப்பையும் கூறி முழக்கத்தைத் துவக்கி வைத்தார். 

             பேரா. முனைவர் இராம வேணுகோபால் அவர்கள் சங்க இலக்கியத்தில் நகைப்பு என்ற தலைப்பில் தொல்காப்பியம் தொடங்கி இன்றைய திரைப்படம் வரை ஒரு அலசல் பார்வையாக  ஒப்பிட்டு மிகச்சிறந்த ஒரு உரையை நிகழ்த்தினார்.

             உரை முடிவுற்ற நிலையில் பொதுச்செயலாளர் அவர்களால் உரையின் எழுந்த கருத்துகளின் அடிப்படையில் வினாக்கள் எழுப்பப்பட்டு சரியாக விடை அளித்த மூவருக்கு திருக்குறள் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

           சுவைஞர் உரையாகப்  புலவர் தங்க ஆறுமகனார் அவர்களால், உரையில் தான் ரசித்த பகுதிகளை எடுத்துக்காட்டி  சிற்றுரை ஒன்று நிகழ்த்தப்பட்டது. 

           இடையில் விழாவுக்கு வருகை புரிந்திருந்த அனைவருக்கும் இன்சுவைப் பணியங்கள் வழங்கப்பட்டது.

விழாவின் இறுதியில் இவ் அமைப்பின் நிறுவனர்  முனைவர்.  பெரும்புலவர். சி.வெ. சுந்தரம் அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டது.

அனைவரிடமும் கையொப்பமும் தொலைபேசி எண்களும் பெற்றுக்கொண்ட பிறகு, அடுத்த கூட்டத்தின் அறிவிப்பை கூறியவுடன், முழக்கம் இனிதே முடிவுற்றது. மீண்டும் கூட்டத்தில் இணையும் விருப்பத்துடன் அனைவரும் பிரியா விடை பெற்றுக்கொண்டனர்.

சிறப்புப் பேச்சாளரின் உரையிலிருந்து பெறப்பட்ட நுட்பமான நகைச்சுவைக் கருத்துகள்:

 • தொல்காப்பியர் கூறியுள்ள மெய்ப்பாடுகள் எட்டு. அவை நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை.
 • இவற்றுள் நகைப்புக்கு மட்டும் தொல்காப்பியர் இரண்டு மெய்ப்பாடுகளைக் கூறியுள்ளார். 
 • நகை என்பது முகம் சிரிப்பது. அல்லது வெளிப்படையான சிரிப்பு. உவகை என்பது அகம் சிரிப்பது.  (உள்ளம்) சிரிப்பது.
 • நகை என்ற மெய்ப்பாடு எள்ளல், இளமை, பேதைமை, மடமை என்ற நான்கு களங்களில் தோன்றும்.
 • இந்த நான்கு களங்களில் தோன்றும் நகைக்கும் சங்க இலக்கியத்தில் பாடல்கள் காணக் கிடைக்கின்றன.
 • தலைவனின் வருகையைக் காணக் கிடைக்காது தலைவி வருந்தி இருக்க ,கார்ப்பருவத்து முல்லை பூத்து முறுவலிக்கத்  தன்னைக் கண்டு எள்ளுவது போலச் சிரிக்கிறாயே என்று தலைவி முல்லையைப் பார்த்து கூறும் “முல்லை! வாழியோ முல்லை! நீநின் சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை நகுவைப் போல காட்டல் தகுமோ” என்ற தலைவி கூற்றுப் பாடல்.
 • ”சுடர்த்தொடீஇ! கேளாய் - தெருவில்நாம் ஆடும்.............
  வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு,
   அன்னாய் இவன் ஒருவன் செய்த்து காண்’ என்றேனா,
  அன்னை அலறிப் படர்தரத் தன்னை யான்,
   ‘உண்ணுநீர் விக்கினான்’ என்றேனா,
  அன்னையும் தன்னைப் புறம்பழித்து நீவ,
  மற்று என்னைக் கடைக்கண்ணால் கொல்வான போல் நோக்கி,
  நகைக்கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்”  (கலித்தொகை 51)
  என்ற பாடலின் நகைச்சுவையும் அதனை எடுத்தாண்ட திரைப்படப் பாடலான
   “புத்தி சிகாமணி பெத்த பிள்ளை, புன்னகை செய்யுது சின்ன பிள்ளை,
  ஆராரோ அட ஆராரோ...அசட்டுப் பய புள்ள ஆராரோ” என்று உவகையின் உச்சமாக வந்த சொல்லாட்சியின் விளக்கம் பெறப்பட்டது.
  .
 • ”யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும்”  என்ற  என்ற திருக்குறளையும் அதற்கு இணையான திரைப்பாடலான “உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே, விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே” என்ற பாடல் மேற்கோளுடன் விளக்கம்.
 • பாடம் படித்து நிமிர்ந்த விழி தன்னில்
  பட்டுத் தெறித்தது மானின் விழி
  ஆடை திருத்தி நின்றாள் இவள்தான்”
  இவன் ஆயிரம் ஏடு திருப்பி விட்டான்” என்ற பாரதிதாசனின் பாடலுக்கு இலக்கணமானத் தொல்காப்பியரின் களவுக்கால மெய்ப்பாடுகளான “கூழை விரித்தல், காதொன்று களைதல், ஊழணி தைவரல், உடை பெயர்த்துடுத்தல்” ஆகிவற்றின் விளக்கம் பெறப்பட்டது..
புகைப்படங்கள்
   

  - பொதுச்செயலாளர்.