சோலையின் நோக்கம்

தமிழையும், சங்க இலக்கியங்களையும் பாமரனும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைக்க முயல்வதே சோலையின் நோக்கம்.

இன்றைய முழக்கம்

“செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே” புறநானூறு.189

எட்டுத்தொகை நூல்கள்

நூல்

நற்றிணை 

இந்நூல் 9 அடிச் சிற்றெல்லையும் 12 அடி பேரெல்லையும் உடையது. 175 புலவர்களால் பாடப்பெற்றது. தற்போது 192 புலவர்கள் பெயர்கள் காணப்படுகின்றன. இதைத் தொகுத்தவர் யார் என தெரியவில்லை தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார். இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர்.



1. குறிஞ்சி

நின்ற சொல்லர்; நீடுதோறு இனியர்;
என்றும் என் தோள் பிரிபு அறியலரே'
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,
புரைய மன்ற, புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி,
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!





தோழீ ! நம் காதலர் நிலைமை தவறாத வாய்மையுடையவர்; நெடிதாகத் தோன்றுகின்ற இனிமையுடையவர்; எப்பொழுதும் என் தோள்களைப் பிரியும் அன்னதொரு குணக் குறைபாடிலர்; அத்தகைய மேதக்கோருடைய நட்பு; தாமரையின் தண்ணிய தாதினையும் மேலோங்கிய சந்தனத்தின் தாதினையும் ஊதி, அந்தச் சந்தன மரத்தில் வைத்த இனிய தேன் போலத் திண்ணமாக மேதக்கன ஆதலின்; அவர் நீரையின்றியமையாத உலகியல் போலத் தம்மை யின்றியமையாத நம்பால் முன்பு விருப்பமிக வைத்தருளி; பின்பு பிரிதலால் நம் நறிய நுதல் பசலையூர்தற்கு அஞ்சி; செய்வதறியாராய்த் தடுமாற்றமடைவாரோ?; அங்ஙனம் செய்யார்காண்;

பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது. - கபிலர்

2. பாலை

அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து,
ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு,
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த
செம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய,
வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை,
மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே;
வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று
எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்,
காலொடு பட்ட மாரி
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே!

சுரமோ, ஆழ்ந்துபடக் கிடந்த பெரிய குளிர்ச்சியையுடைய குன்றத்து; தழைத்த வலிய ஈத்த மரங்களையுடைய காற்றுச் சுழன்று வீசும் காட்டின் கண்ணே; நெறிகொண்டு செல்லும் மக்களுடைய தலையை மோதியதனாலே குருதி படிந்த சிவந்த மாறுபட்ட தலையையுடையனவும்; இரத்தம் பூசிய வாயையுடையனவுமாகிய பெரிய தலையையுடைய புலிக்குட்டிகள்; இம் மாலைப் பொழுதில் தாம் பதுங்கியிருக்கும் மரலின் தூஊகளை நிமிர்ந்து நோக்கா நிற்கும் இண்டங் கொடியுடனே ஒருசேரப் படர்கின்ற ஈங்கையையுடையவாகும், இத்தகைய சுரத்தின்கண்ணே; கூரிய பற்களையுடைய மெல்லியளாகிய மடந்தையை முன்னே செல்லவிடுத்துப் பின்னே; இவ்விராப் பொழுதிற் செல்லா நிற்கும். இவ்விளைஞனுள்ளமானது; காலொடுபட்ட மாரி மால்வரை மிளிர்க்கும்; காற்றொடு கலந்த மழை பெய்யுங் காலத்திற் பெரிய துறுகற்களைப் புரண்டு விழுமாறு மோதுகின்ற இடியினுங்காட்டிற் கொடியதா யிராநின்றது;

உடன் போகாநின்றாரை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது. 
- பெரும்பதுமனார்

3. பாலை

ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினைப்
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்,
கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து,
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்
வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச்
5
சுரன்முதல் வந்த உரன் மாய் மாலை
உள்ளினென் அல்லெனோ, யானே- உள்ளிய
வினை முடித்தன்ன இனியோள்
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே?

நெஞ்சே! பார்ப்பை யீன்ற பருந்து வருந்தியுறையா நிற்கும் ஆகாயத்தின்மேற் செல்லுகின்ற நெடிய கிளைகளையும்; பொரிந்த அடியையுமுடைய வேம்பினது புள்ளிபோன்ற நிழலின்கண்ணே; கட்டளைக் கற்போன்ற அரங்கை வட்டினாலே கீறி; ஏனைத் தொழிலொன்றும் கற்றறியாத சிறுவர்கள், நெல்லியங்காயை வட்டாகக்கொண்டு பாண்டிலாடா நிற்கும்; விற்போரால் ஆறலைத்துண்ணும் மழவரின் வெய்ய குடியிருப்பினையுடைய சீறூரையுடைய; அழற் சுரத்தின் கண்ணே முற்பட்டு வந்த நம் வலியனைத்தையும் குறைக்கின்ற மாலைப் பொழுதைக் கண்டு; இம் மாலையானது கருதிய வினை முடித்தாற் போன்ற இனிமையையுடைய நம் காதலி; மனையகத்து மாட்சிமைப்பட்ட விளக்கை ஏற்றி அதன் முன்னின்று அவர் தாம் இன்னும் வந்தாரில்லையே யென்று அவ்விளக்கொடு வெறுத்துத் துன்புற்றுக் கருதுகின்ற பொழுதாகும் என்று; யான் முன்னம் ஒரு காலத்து நினைத்தேன் அல்லனோ? அங்ஙனமாக இப்பொழுதும் பொருளீட்டுமாறு ஒருப்படுத்தி என்னை வருத்தாதேகொள்; இனி யான் வாரேன் காண்;

முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக் கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - இளங்கீரனார்


4. நெய்தல்

கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர்
நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசைஇ,
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி,
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு,
'அலரே அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை
5
அரிய ஆகும் நமக்கு' எனக் கூறின்,
கொண்டும் செல்வர்கொல்- தோழி!- உமணர்
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி,
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்
மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக்
10
கருங் கால் வெண் குருகு வெரூஉம்
இருங் கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே?

தோழீ ! கடற்கரைச் சோலையிலுள்ள சிறுகுடியிலிருந்து கடலின்மேற் செல்லும் பரதவர்; நீலநிறத்தையுடைய புன்னையின் கொழுவிய நிழலிலே தங்கி; தண்ணிய பெரிய கடற் பரப்பிற் செல்லுதற்கு நல்ல அற்றம் பார்த்து; அவ்விடத்து முறுக்குண்டு கிடந்த வலையைப் பிரித்துப் புலர்த்தா நிற்கும் துறையையுடைய நம் தலைவர்பாற் சென்று; நமக்குண்டாகிய பழிச் சொல்லை அன்னை அறிந்தால்; இனி இங்குத் தங்கி¢க் களவொழுக்கத்து வாழ்தல் அரியவாகும் என்று கூறினால்; உப்பு வாணிகர் வெளிய கல்லுப்பின் விலை கூறிக் கூட்டமாகிய ஆனிரையை எழுப்புகின்ற; நெடிய நெறியிற் செலுத்தும் பண்டிகள் மணலின் மடுத்து முழங்கும் ஓசையைக் கேட்டு; வயலிலுள்ள கரிய காலையுடைய வெளிய நாரைகள் வெருவா நிற்கும்; கரிய கழி சூழ்ந்த நெய்தனிலத்தின்கணுள்ள தம் உறைவிடமாகிய ஊருக்கு; நம்மை யழைத்துக் கொண்டும் போவரோ?

தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி அலர் அச்சம் தோன்றச் சொல்லி வரைவு கடாயது. - அம்மூவனார்


5. குறிஞ்சி

நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப,
அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப,
குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்
நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப,
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி
5
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்,
அரிதே, காதலர்ப் பிரிதல்- இன்று செல்
இளையர்த் தரூஉம் வாடையொடு
மயங்கு இதழ் மழைக் கண் பயந்த தூதே, 



தோழீ! இன்று பிரிந்து செல்லுகின்ற தோழியரை மீட்டும் நின்னை ஆற்றுவிக்குமாறு கூட்டுகின்ற வாடைக் காற்றினால் வருந்திய இமைகளையுடைய மழைபோல நீர்வடிக்கின்ற நின்கண்கள்தாம்; அவர் செல்லாதவாறு ஒரு குறிப்பாகிய தூதைத் தோற்றுவித்து விடுத்தன, அங்ஙனம் விடுத்த தூதின் காரணமாக; இனி மிக்க மழை பெய்தலாலே நிலம் நீரால் நிரம்பப் பெற்று நிறையவும், மலைமேலுள்ள மர முதலாயின தழைப்பவும், அகன்ற வாயையுடைய குளிர்ந்த சுனையில் நீர் நிறைதலால் அங்கு முளைத்தெழுந்த குளநெல் முதலிய பயிர்கள் நெருங்கி வளரவும்; கொல்லையின் கண்ணே குறவர் வெட்டியழித்தலானே குறைபட்ட மிக்க நறைக்கொடி மீண்டுந் தளிர்த்துக் கொடியாகி நறுமணங் கமழ்கின்ற வயிரமுற்றிய சந்தன மரத்தின் மீது படர்ந்து சுற்றியேறவும்; பெருமழையைப் பொழிந்த தொழிலையுடைய மேகமானது; தென்றிசையின் கண்ணே யெழுந்து செல்லுதலாலே பிரிந்தோர் இரங்குகின்ற முன்பனிக்காலத்தும்; நீ நின் காதலரைப் பிரிந்து உறைதல் அரியதாகும்;

தலைவன் செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது. - பெருங்குன்றூர்கிழார்


6. குறிஞ்சி

நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால்
நார் உரித்தன்ன மதன் இல் மாமை,
குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண்,
திதலை அல்குல், பெருந் தோள், குறுமகட்கு
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே,
5
'இவர் யார்?' என்குவள் அல்லள்; முனாஅது,
அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி
எறி மட மாற்கு வல்சி ஆகும்
வல் வில் ஓரி கானம் நாறி,
இரும் பல் ஒலிவரும் கூந்தல்
பெரும் பேதுறுவள், யாம் வந்தனம் எனவே.

நீரில் வளர்ந்த ஆம்பலின் உள்ளிற் புழையுடைய திரண்ட தண்டை நாருரித்தாற் போன்ற; அழகு குறைந்த மாமையையும்; குவளை போன்ற அழகு தங்கப்பெற்ற குளிர்ச்சியுடைய கண்ணையும்; திதலையுடைய அல்குலையும் பெரிய தோளையும் உடைய இளமகளாகிய நம்மாற் காதலிக்கப்பட்ட தலைவியிடத்து; நெருங்கச் சென்று எமது வருகையை முன்னாடிக் கூறுவாரைப் பெறின்; அவரை நோக்கி இவர் யாவரென்று கேட்பாளல்லள்; சுரத்திலுள்ள குமிழ மரத்தின் வளைந்த மூக்கினையுடைய முற்றிய கனிகள் கீழே உதிர்ந்து ஆங்குக் குதித்து விளையாட்டயர்கின்ற இள மானுக்கு வெறுப்பில்லாது உணவாகாநிற்கும்; வலிய வில்லையுடைய ஓரி என்பவனது கானம்போல நறுநாற்றமுடையவாகி; கரிய பலவாகித் தாழ்ந்த கூந்தலையுடைய அவள்தான்; யாம் வந்திருக்கின்றேம் என்பதைக் கேட்டவுடன்; களிப்பினாலே பெரிதும் மயக்கமெய்தா நிற்பள்;

இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்ப, தன்நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்


7. பாலை

சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப,
கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக்
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப,
தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம்
5
இன்னே பெய்ய மின்னுமால்- தோழி!
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை
தண் நறுஞ் சிலம்பில் துஞ்சும்
சிறியிலைச் சந்தின வாடு பெருங் காட்டே.

தோழீ ! மூங்கிலின் வெளிய நெல்லைத் தின்ற வரி பொருந்திய நெற்றியையுடைய யானை; தண்ணிதாகிய நறுமணங் கமழு மலைப்பக்கத்திலே துஞ்சா நிற்கும்; சிறிய இலையுடைய சந்தன மரத்தினையுடைய வாடிய பெரிய காட்டினகத்து; அச்சத்தையுடைய இடமகன்ற சுனையில் நீர் நிறையவும்; பெரிய மூங்கில்களையுடைய மலைப்பக்கத்தில் அருவிகள் ஆரவாரிப்பவும்; கற்களைப் புரட்டிக்கொண்டு ஓடிவருகின்ற மிக்க விசையினையுடைய கானியாற்றின் கண்ணே; பற்றுக் கோடாகிய மூங்கிலும் முழுகுமாறு பெருகிய வெள்ளத்தின் அலைகாட்டிற் சென்று மோதா நிற்கவும்; ஒலிக்கின்ற இடியேற்றொடு முழக்கஞ் செய்து; முகில்கள் இப்பொழுதே மழை பெய்யவேண்டி மின்னா நிற்கும்; இக் காலத்தை நோக்கினவுடன் அவர் இன்னே வந்து நின்னை வரைந்து கொள்வராதலின், நீ வருந்தாதே கொள் !

பட்ட பின்றை வரையாது கிழவோன் நெட்டியிடைக் கழிந்து பொருள்வயிற்பிரிய, ஆற்றாளாய தலைவிக்குத் தோழி சொல்லியது. - நல்வெள்ளியார்
8. குறிஞ்சி

அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்,
பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்,
திரு மணி புரையும் மேனி மடவோள்
யார் மகள்கொல்? இவள் தந்தை வாழியர்!
துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல் 
5
அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்
தண் சேறு தாஅய், மதனுடை நோன் தாள்
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்
திண் தேர்ப் பொறையன் தொண்டி-
தன் திறம் பெறுக, இவள் ஈன்ற தாயே!
10

மிக்க துன்பமுழந்த செவ்வரி பரந்த மதர்த்த குளிர்ச்சியையுடைய கண்களையும்; பலவாகிய பூக்களுடனே மாறுபடத் தொடுக்கப்பட்ட தழையுடையை அசையும்படி உடுத்த அல்குலையும்; அழகிய நீலமணியொத்த மேனியையுமுடைய இவ் விளமகள்; யாவர் புதல்வியோ?; அசையாத உள்ளத்தையுடைய எம்மையே துயரஞ் செய்தனள்!; இத்திறம் வல்லவளைப்பெற்று எனக்குதவிய இவள் தந்தை நெடுங்காலம் வாழ்வானாக!; இவளை ஈன்ற தாயும்; அகன்ற வயலின்கண்ணே மள்ளரால் அரியப்பட்டும் அரிச்சூட்டை எடுப்போராற் கொண்டுவரப்பட்டும் தண்ணிய சேறு பரந்து; அழகினையும் வலிய தண்டினையுமுடைய கண்போன்ற நெய்தல் நெற்போரின்கண்ணே மலரும்; திண்ணிய தேரையுடைய பொறையனது தொண்டி நகர் போன்ற சிறப்பினைப் பெறுவாளாக!;

இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் தலைமகளை ஆயத்தொடும் கண்ட தலைமகன் சொல்லியது.


9. பாலை

அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு,
அலமரல் வருத்தம் தீர, யாழ நின்
நல மென் பணைத் தோள் எய்தினம்; ஆகலின்,
பொரிப் பூம் புன்கின் அழற் தகை ஒண் முறி
5
சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி,
நிழல் காண்தோறும் நெடிய வைகி,
மணல் காண்தோறும் வண்டல் தைஇ,
வருந்தாது ஏகுமதி- வால் எயிற்றோயே!
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும்
10
நறுந் தண் பொழில, கானம்;
குறும் பல் ஊர, யாம் செல்லும் ஆறே.

வெள்ளிய பற்களையுடையோய!¢; யாம் செல்லும் நெறியில் உள்ள காடெல்லாம்; மாமரத்தின் அரும்பைக் கோதி மகிழ்கின்ற குயில் கூவி விளையாடும் நறிய தண்ணிய சோலையை யுடையன; அன்றியும் அடுத்தடுத்துள்ள பல ஊர்களையுமுடையன; சிதைவில்லாத செயலை முயல்கின்ற ஆர்வ மாந்தர் அக்காரியம் முற்றுப்பெறுமாறு தாம் வழிபடு தெய்வத்தைக் கண்கூடாகக் கண்டாற் போல; யாம் நெடுங்காலம் நின்னைப்பெற முயன்றதனானாகிய சுழற்சியையுடைய வருத்தமெல்லாந் தீரும்படியாக; நின் அழகிய மெத்தென்ற பருத்த தோள்களை அடைந்தனம் ஆதலினால்; இனி நீ பொரியையொத்த பூக்களையுடைய புன்கினது அழகுமிக்க ஒள்ளிய தளிரை; சுணங்கு நிரம்பிய அழகிய முலையிலே அதன் வீற்றுத் தெய்வம் சிறப்போடிருக்குமாறு அப்பி; நிழலைக் காணுந்தோறும் நெடும்பொழுது ஆண்டுத் தங்கி; மணல்களைக் காணுந்தோறும் சிற்றில் புனைந்து விளையாடி; நெறிவந்த வருத்தத்தைப் போக்கி விட்டு மெல்ல மெல்லச் செல்வாயாக;

உடன்போகாநின்ற தலைமகன் தலைமகட்கு உரைத்தது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ


10. பாலை

அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்,
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்,
நீத்தல் ஓம்புமதி- பூக் கேழ் ஊர!
இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க்
5
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்,
வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்தன்ன நின்
பிழையா நல் மொழி தேறிய இவட்கே.

மலர்கள் விளங்கிய பொழில் சூழ்ந்த ஊரையுடையோனே !; இனிய கடுப்புடைய கள்ளுணவையும் இழையணிந்த நெடிய தேர்களையுமுடைய வலிமிக்க

உடன்போக்கும் தோழி கையடுத்தது.