சோலையின் நோக்கம்

தமிழையும், சங்க இலக்கியங்களையும் பாமரனும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைக்க முயல்வதே சோலையின் நோக்கம்.

இன்றைய முழக்கம்

“செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே” புறநானூறு.189

Friday, December 24, 2010

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTWDPoOOBuatuBlCggZG5qfo_5Lt3fpY7MDII_7DiUpMRmUmhy9WA

நாள்: 02.01.2011 நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

முன்னிலை 
பாலகோபாலன் M.A.

சொற்பொழிவாளர்:

பேராசிரியர்.
முனைவர். P. அண்ணாதுரை  
தமிழ்த்துறை
 மார் கிரிகோரியஸ் கலை அறிவியல் கல்லூரி, 
முகப்பேர், சென்னை.

தலைப்பு:

புறப்பாடல்களில் காணலாகும் சமுதாய மேன்மை.

சங்கத் தேனருந்த வாரீர்!!
 பொங்கு தமிழின்பம் காணீர்!! 
தொடர்புக்கு

ஒன்பதாம் முழக்கத்தின் அறிக்கை..

Monday, December 13, 2010

முக்கிய அறிவிப்பு

துணைத்தலைவர்  நியமனம்:
12.12.2010 ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற பைந்தமிழ்ச் சோலையின் செந்தமிழ் முழக்கத்தில் பைந்தமிழ்ச் சோலையின் துணைத்தலைவராக திரு. தஞ்சை வாசன் அவர்களை நிறுவனத் தலைவர் பெரும்புலவர் முனைவர் சி.வெ.சுந்தரம் முன் மொழிந்தார்.  பேராசிரியர். முனைவர். சேதுராமலிங்கம் அவர்கள் அதனைத் வழிமொழிந்தார். அமைப்பின் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைந்து ஒருமனதாகத் தஞ்சை வாசன் அவர்களைத் துணைத்தலைவராகத் தேர்ந்து எடுத்தனர். அவருக்கு நிறுவனத் தலைவர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துச் சொன்னார். 

தஞ்சை வாசன் அவர்களின் சீரிய தொண்டில் இப்பதவி பெருமை  அடையவும்!   மேன்மேலும் உயரவும் இளஞ்சிறுத்தை தஞ்சை வாசன் அவர்களுக்குப் பைந்தமிழ்ச் சோலை அமைப்பாளர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.  
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcT5ghJAk6dhSZjmHDGDDt8lj6ApDYs8qcvh11zt-fXfbuhr0oM-

- பொதுச்செயலாளர்.


Friday, November 26, 2010

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 9

நாள்: 05.12.2010 நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

முன்னிலை

இராம. சு. சிவகுமாரன், M.A.,M.Phil.,M.Ed.,
தலைமை ஆசிரியர்,
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,
கலசப்பாக்கம், திருவண்ணாமலை.

சொற்பொழிவாளர்:

பேராசிரியர். முனைவர். பெ.கி.பிரபாகரன்,
தமிழ்த்துறை
திருத்தங்கல் நாடார் கலை அறிவியல் கல்லூரி, சென்னை.
செயலாளர், இலக்கிய வட்டம், கலைஞர் நகர், சென்னை.


தலைப்பு:

திரைப்பாடல்களில் சங்க   இலக்கிய செல்வாக்கு


சங்கத் தேனருந்த வாரீர்!!
 பொங்கு தமிழின்பம் காணீர்!! 
தொடர்புக்கு

முழக்கம் எட்டின் அறிக்கை....

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் எட்டாவது சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கம் 07.11.2010 ஞாயிற்றுக் கிழமை அன்று சென்னை கலைஞர் நகரில் உள்ள சிவன் பூங்காவில் நடைபெற்றது

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச் சோலையின் பொதுச்செயலாளர் ப.பானுமதி, முழக்கத்திற்கு வருகை தந்திருந்த சிறப்புப் பேச்சாளர், முன்னிலை வகிப்பவர், சிறப்பு விருந்தினர் உள்ளிட்ட அனைவரையும் முறையாக வரவேற்றார்.

அதைத் தொடர்ந்து பைந்தமிழ்ச்சோலையின் நிறுவனர் பெரும்புலவர். முனைவர். சி.வெ. சுந்தரம் அவர்கள் சோலையின் நோக்கம், அதன் செய்ல்பாடுகள், அதன் வளர் நிலை ஆகியவற்றைப் பற்றி விரிவானதொரு விளக்கம் கொடுத்தார்.

அடுத்து பேரா. முனைவர் சேதுராமலிங்கம் அவர்கள் உடுப்பதும் உண்பதும் தனியுடைமை, ஈதல் பொது உடைமை, எனவே ஈதல் இசைபட வாழ்தலே உயிருக்கு ஊதியம் என்றுரைத்தார். செய்யுட்களில் வரும் ஏகாரம் அதன் சிறப்பு கருதி நீட்டி ஒலிப்பதைத் திருமூலரின் திருமந்திரப் பாடலில் இருந்து மேற்கோள் காட்டி (உள்ளம் பெரும் கோயில்..... மணிவிளக்கே........) ஏகாரத்தின் தெளிவை விளக்கினார். மேலும் திருப்பாவையில் வரும் ’ஏலோரெம்பாவை’ என்ற சொல்லுக்கு ‘ஏல் ‘ என்றால் ஏற்றுக்கொள் ‘ஓர்’ என்றால் ‘ஆராய் ’ எனவே ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள் என்று ஆண்டாள் கூறுவதாக விளக்கம் கொடுத்தார்.

முன்னிலை வகித்த பேரா. முனைவர். ப. கி. பிரபாகரன் அவர்கள் பேசுகையில் “சென்னையில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இலக்கிய வட்டம் தொடங்கியவர் முகம் மாமணி. இதன் பின் நூலகர் வாசகர் வட்டம், சித்தர் இலக்கியம், இலக்கிய சோலை என்று இப்போது கலைஞர் நகரில் இலக்கியம் செழித்து வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

இலக்கியங்கள் எளிமைப் படுத்தப் பட்டால் மட்டுமே பாமரர்களைச் சென்றடையும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, வாலியின் பிறந்த நாளில் கலந்து கொண்ட வைரமுத்து வாலி வெற்றி பெற்ற அளவுக்குத் தான் வெற்றி பெறாததற்குக் காரணம் இலக்கியங்களைப் படித்துவிட்டு வந்ததால். வாலியின் பாடல்கள் பாமரர்களைச் சென்று அடைந்துள்ளது. தன் பாடல்கள் பாமரர்களைச் சென்றடைய வில்லை என்று கூறியதைக் கூறி பட்டுக்கோட்டையாரின் பாடல்களின் வெற்றிப் பின்னணியும் எளிமையும் பாமரத்தனமுமே என்று கூறினார்.

சிறப்புச் சொற்பொழிவாளர் முனைவர். இர. பாபு ராஜன் தாஸ் அவர்களின் சொற்பொழிவு நிகழ்ந்தது. சொற்பொழிவில் புறநானூற்றுப்பாடல்களை இசையுடன் பாடிக்காட்டியது சிறப்பாக அமைந்திருந்தது. புறநானூற்றுப் பாடலான “யாதும் ஊரும் யாவரு கேளிர்” என்று தொடங்கும் பாடலைப் பாடிய போது, சுவைஞர்கள் பலத்த கரஒலியுடன் மீண்டும் ஒரு முறை பாடச்சொல்லி கேட்டு மகிழ்ந்தனர்.

சொற்பொழிவின் இறுதியில் பைந்தமிழ்ச்சோலையின் பொதுச்செயலாளர் ப. பானுமதி அவர்களால் சொற்பொழிவில் இருந்து சில வினாக்கள் எழுப்பப்பட்டு, சரியான விடை பகர்ந்தவர்களுக்குப் புத்தகங்கள் பரிசாகக் கொடுக்கப் பட்டன.

வினாக்கள்:
அ। கருவாட்டின் பெயர் என்று சொற்பொழிவாளர் குறிப்பிட்டது என்ன?
ஆ। ஆண்பெயரில் அமைந்த புதுவகையான நெல் எது?
இ। ஒரு முகம் வள்ளியொடு நகையாடியது என்ற பாடல் எந்த இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது?

சரியான விடையைச் சொல்லி பரிசைப் பெற்றவர்கள்:
திருமதி. செல்வராணி
திரு த. ஆத்மன்
திரு. வெ. சீனுவாசன்

முறையான நன்றியுரையை பேரா।முனைவர் நீலா செல்வராஜ் அவர்கள் வழங்கினார்.
விழாவின் இடையில் வருகை தந்திருந்த அனைவருக்கும் இவ் அமைப்பின் சிறு தொண்டன் (இளவல் பாலாஜி) இன்சுவை பணியங்களை வழ்ங்கினான்.

பொதுச்செயலாளர் ப. பானுமதி அவர்களால் அடுத்த கூட்டத்தின் அறிவிப்பு செய்யப் பட்டது. வந்திருந்த அனைவரிடமும் கையொப்பமும் அலைபேசி எண்களும் பெற்றுக்கொண்ட பின்பு அனைவரும் இனிதே பிரியா விடை பெற்றனர்..


சொற்பொழிவில் பெறப்பட்ட கருத்துக்கள்:
தலைவியைக் கண்டு வந்த செவிலி நற்றாயிடம் தலைவனும் தலைவியும் தங்கள் குழந்தையை இடையில் படுக்க வைத்துக் கொண்டு உறங்கும் காட்சி கலைமானும் பிணைமானும் குட்டி மானை இடையில் படுக்க வைத்து படுத்துறங்குவது போல இருந்தது। இக்காட்சி அந்த விண்ணுலகிலும் கிடைக்காத காட்சி என்று வியந்து கூறுவதை “மறியுடன் படுத்த மான் பிணை போல” எங்க சங்கப் பாடலை எடுத்துக்காட்டி விளக்கப்பட்டது।

தலைவனும் தலைவியும் பிரிவிலும் ஒருவரை ஒருவர் நம்பி வாழ்ந்த இல்லற மாண்பு “நீரின்றி அமையாது உலகு”என்ற குறுந்தொகைப் பாடலுடன் விளக்கப் பட்டது।

மக்கள் நடமாட்டம் இல்லாத் இடத்தில் ஆவினங்கள்,பெண்கள், முதியோர், குழந்தைகள், பார்ப்பனர், மகவீனாதார், நோய்வாய்ப்பட்டார், அங்கக்குறைபாடு உடையோர் ஆகியோரை முதலில் ஒரு பாதுகாப்பான இடத்தில் சேர்த்த பின்னரே போர் செய்தல் அன்றைய போர் முறை என்பதை
“ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்” என்று தொடங்கும் நெட்டிமையார் பாடலை மேற்கோள் காட்டி விளக்கப்பட்டது।
அக்காலத்தில் பெண்கள் வம்புகள் பேசினர்। இதற்கு அம்பல் அலர் என்று பெயர்। இவையும் காதலர்களை ஒன்று சேர்க்கவே பயன் பட்டன।

தலைவனும் தலைவியும் பிறவிகள் தோறும் சேர்ந்து வாழ விரும்பினர் என்பது ‘இம்மை மாறி மறுமை யாகினும் யானே யாகுவன் நின் நெஞ்சு நேர்பவள்” என்று கூறும் சங்கத் தலைவியின் கூற்றான குறுந்தொகை அடிகளால் விளக்கப்பட்டது.

புகைப்படங்கள்

Saturday, November 6, 2010

நன்றி... நன்றி... நன்றி... நன்றி..

செந்தமிழ் முழக்கம் சிறக்க வாழ்த்திய தமிழ் நெஞ்சங்கள் கலைநிலா, தஞ்சை வாசன், கலைவேந்தன், ராஜா, மணிஅஜித் அனைவருக்கும் நெய்தலங்கானல் பைந்தமிழ்ச் சோலை சார்பின் நெஞ்சார்ந்த நன்றியும் அன்பும்..

வாழ்த்துச்செய்தியைக் காண  இங்கே செல்லவும்.


- பொதுச்செயலாளர்.

Wednesday, November 3, 2010

http://img429.imageshack.us/img429/7582/diwali3500du.jpg

உலகெங்கும் வாழும் 
தமிழர்கள் அனைவருக்கும், 
அகமும் புறமும் 
அறிவொளியும் 
தீப ஒளியும் பெருகிட  
நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் 

இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்..

Wednesday, October 13, 2010

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 8

ஏழாம் முழக்கத்தின் அறிக்கை....

          நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் ஏழாவது சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கம்  03/10/10 ஞாய்ற்றுக் கிழமை அன்று சென்னை கலைஞர் நகரில் உள்ள சிவன் பூங்காவில் நடைபெற்றது.

             முழக்கத்தின் தொடக்கத்தில்  நெய்தலங்கானல் பைந்தமிழ்ச் சோலையின் பொதுச்செயலாளர்  ப. பானுமதி, முழக்கத்திற்கு வருகை தந்திருந்த சிறப்புப் பேச்சாளர் உள்ளிட்ட அனைவரையும்  முறையாக வரவேற்றார்.

            அடுத்ததாக இம் முழக்கத்திற்கு முன்னிலை வகித்த பேரா. முனைவர். சேதுராமலிங்கம் (இன எழுச்சிக் கவிஞர் நெல்லை இராமச்சந்திரன் அவர்களால் தவிர்க்க முடியாத சூழலால் முன்னிலை வகிக்க முடியாது போனது)  நகைச்சுவை பற்றி சிறு குறிப்பையும் கூறி முழக்கத்தைத் துவக்கி வைத்தார். 

             பேரா. முனைவர் இராம வேணுகோபால் அவர்கள் சங்க இலக்கியத்தில் நகைப்பு என்ற தலைப்பில் தொல்காப்பியம் தொடங்கி இன்றைய திரைப்படம் வரை ஒரு அலசல் பார்வையாக  ஒப்பிட்டு மிகச்சிறந்த ஒரு உரையை நிகழ்த்தினார்.

             உரை முடிவுற்ற நிலையில் பொதுச்செயலாளர் அவர்களால் உரையின் எழுந்த கருத்துகளின் அடிப்படையில் வினாக்கள் எழுப்பப்பட்டு சரியாக விடை அளித்த மூவருக்கு திருக்குறள் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

           சுவைஞர் உரையாகப்  புலவர் தங்க ஆறுமகனார் அவர்களால், உரையில் தான் ரசித்த பகுதிகளை எடுத்துக்காட்டி  சிற்றுரை ஒன்று நிகழ்த்தப்பட்டது. 

           இடையில் விழாவுக்கு வருகை புரிந்திருந்த அனைவருக்கும் இன்சுவைப் பணியங்கள் வழங்கப்பட்டது.

விழாவின் இறுதியில் இவ் அமைப்பின் நிறுவனர்  முனைவர்.  பெரும்புலவர். சி.வெ. சுந்தரம் அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டது.

அனைவரிடமும் கையொப்பமும் தொலைபேசி எண்களும் பெற்றுக்கொண்ட பிறகு, அடுத்த கூட்டத்தின் அறிவிப்பை கூறியவுடன், முழக்கம் இனிதே முடிவுற்றது. மீண்டும் கூட்டத்தில் இணையும் விருப்பத்துடன் அனைவரும் பிரியா விடை பெற்றுக்கொண்டனர்.

சிறப்புப் பேச்சாளரின் உரையிலிருந்து பெறப்பட்ட நுட்பமான நகைச்சுவைக் கருத்துகள்:

 • தொல்காப்பியர் கூறியுள்ள மெய்ப்பாடுகள் எட்டு. அவை நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை.
 • இவற்றுள் நகைப்புக்கு மட்டும் தொல்காப்பியர் இரண்டு மெய்ப்பாடுகளைக் கூறியுள்ளார். 
 • நகை என்பது முகம் சிரிப்பது. அல்லது வெளிப்படையான சிரிப்பு. உவகை என்பது அகம் சிரிப்பது.  (உள்ளம்) சிரிப்பது.
 • நகை என்ற மெய்ப்பாடு எள்ளல், இளமை, பேதைமை, மடமை என்ற நான்கு களங்களில் தோன்றும்.
 • இந்த நான்கு களங்களில் தோன்றும் நகைக்கும் சங்க இலக்கியத்தில் பாடல்கள் காணக் கிடைக்கின்றன.
 • தலைவனின் வருகையைக் காணக் கிடைக்காது தலைவி வருந்தி இருக்க ,கார்ப்பருவத்து முல்லை பூத்து முறுவலிக்கத்  தன்னைக் கண்டு எள்ளுவது போலச் சிரிக்கிறாயே என்று தலைவி முல்லையைப் பார்த்து கூறும் “முல்லை! வாழியோ முல்லை! நீநின் சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை நகுவைப் போல காட்டல் தகுமோ” என்ற தலைவி கூற்றுப் பாடல்.
 • ”சுடர்த்தொடீஇ! கேளாய் - தெருவில்நாம் ஆடும்.............
  வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு,
   அன்னாய் இவன் ஒருவன் செய்த்து காண்’ என்றேனா,
  அன்னை அலறிப் படர்தரத் தன்னை யான்,
   ‘உண்ணுநீர் விக்கினான்’ என்றேனா,
  அன்னையும் தன்னைப் புறம்பழித்து நீவ,
  மற்று என்னைக் கடைக்கண்ணால் கொல்வான போல் நோக்கி,
  நகைக்கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்”  (கலித்தொகை 51)
  என்ற பாடலின் நகைச்சுவையும் அதனை எடுத்தாண்ட திரைப்படப் பாடலான
   “புத்தி சிகாமணி பெத்த பிள்ளை, புன்னகை செய்யுது சின்ன பிள்ளை,
  ஆராரோ அட ஆராரோ...அசட்டுப் பய புள்ள ஆராரோ” என்று உவகையின் உச்சமாக வந்த சொல்லாட்சியின் விளக்கம் பெறப்பட்டது.
  .
 • ”யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும்”  என்ற  என்ற திருக்குறளையும் அதற்கு இணையான திரைப்பாடலான “உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே, விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே” என்ற பாடல் மேற்கோளுடன் விளக்கம்.
 • பாடம் படித்து நிமிர்ந்த விழி தன்னில்
  பட்டுத் தெறித்தது மானின் விழி
  ஆடை திருத்தி நின்றாள் இவள்தான்”
  இவன் ஆயிரம் ஏடு திருப்பி விட்டான்” என்ற பாரதிதாசனின் பாடலுக்கு இலக்கணமானத் தொல்காப்பியரின் களவுக்கால மெய்ப்பாடுகளான “கூழை விரித்தல், காதொன்று களைதல், ஊழணி தைவரல், உடை பெயர்த்துடுத்தல்” ஆகிவற்றின் விளக்கம் பெறப்பட்டது..
புகைப்படங்கள்
   

  - பொதுச்செயலாளர்.

   

  Saturday, September 18, 2010

  சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 7


  http://www.fotosearch.com/bthumb/CSP/CSP227/k2271608.jpg

  நாள்: 03.10.2010 நேரம்: மாலை 6.00 மணி
  இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
  சென்னை 600 078
  (கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

  முன்னிலை
  இன எழுச்சிக் கவிஞர்.  
  நெல்லை இராமச்சந்திரன்.
  சொற்பொழிவாளர்:
  முனைவர். இராம. வேணுகோபாலன்,
  முதல்வர்,
   மார்க் கிரிகோரியஸ் கலை அறிவியல் கல்லூரி,
  முகப்பேர், சென்னை.  தலைப்பு:: சங்க இலக்கியத்தில் நகைப்பு


  http://members.home.nl/hickling/images/redrose21.gifhttp://members.home.nl/hickling/images/pinkrose4.gifhttp://members.home.nl/hickling/images/redrose22.gif


  அனைவரும் வருக!! இலக்கியம் பருகி இதம் பெறுக!!

   
  ஆறாம் முழக்கத்தின் அறிக்கை....

      நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் ஆறாவது சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கம்  05/09/10 அன்று சென்னை கலைஞர் நகரில் உள்ள சிவன் பூங்காவில் நடைபெற்றது.

      முழக்கத்தில் முகப்பில் அன்று ஆசிரியர்தினம் கொண்டாட்டத்தை முன்னிட்டு நல்லாசிரியர்களாக மாணவர்களின் மனத்தில் நீங்கா இடம் பிடித்த முனைவர். பெரும்புலவர். சி.வெ.சுந்தரம், முனைவர் சேதுராமலிங்கம், முனைவர். இராம. வேணுகோபால், முனைவர். பெ. இலக்குமி நாராயணன் ஆகியோருக்குப் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது. 

      இதனைத்தொடர்ந்து முறையான வரவேற்புரை பொதுச்செயலாளர் ப. பானுமதி அவர்களால் வழங்கப்பட்டது.

  முழக்கத்திறகுச் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். இராம. வேணுகோபாலன் முன்னிலை வகித்தார். அவர் உரையாற்றும் போது தொல்காப்பியத்தில் விளக்கம் பெற வேண்டிய இடங்களாக (அடியோர், வினைவலர் ஆகியோரிடம் ஐந்திணை ஒழுக்கம் இடம்பெறாது போன்ற) சிலவற்றைக் குறிப்பிட்டு அதன் விளக்கங்களைப் பேராசிரியர் பெ. இலக்குமி நாராயணன் தர வேண்டுமென் அன்புடன் பணித்தார்.

      டி. ஜி. வைஷ்ணவா கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெ. இலக்குமி நாராயணன் சிறப்புரை ஆற்றினார்.

      சொற்பொழிவுக்கு திருச்சி, சமயபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. எட்வின், பெங்களூருவில் இருந்து தஞ்சை வாசன் ஆகியோர் உட்பட சுமார் 40 பேர் வருகை புரிந்து இருந்தனர்.

      முழக்கத்தின் இடையில் வருகை புரிந்திருந்த அனைவருக்கும் இன்சுவைப் பணியங்கள் வழங்கப்பட்டது.

       சிறப்புப் பேச்சாளர் உரையில் இருந்து பொதுச்செயலாளர் அவர்களால் சில் வினாக்கள் எழுப்பப்பட்டு வந்திருந்தவர்களிடம் விடைகள் பெறப்பட்டன. சரியான விடையைச் சொன்ன நால்வருக்குப் புத்தகங்கள் பரிசாக வழங்கப் பட்டன.

  சிறப்புப் பேச்சாளரின் உரையிலிருந்து பெறப்பட்ட வாழ்வியல் நுட்பங்கள்.

  • ஐவகை நிலப்பாகுபாடு, பாலை பற்றி தனி விளக்கம், முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் பற்றிய தெளிவான விளக்கம்.
  • கைக்கிளையின் பெயர்க்காரணம், தனிச்சிறப்பு, 
  • களவுக்காதல் அனைத்தும் எதிராளியின் இசைவைப் பெறும் வரை கைக்கிளையே.
  • பெருந்திணையின் பெயர்க்காரணம், நன்மையும் தீமையும். 
  • பெருந்திணை ஒழுகலாறு அன்பின் ஐந்திணை ஒழுகலாறாக மாற்றம் பெற  வேண்டியதன் அவசியம்.
  • அடியோர், வினைவலர் ஆகியோரிடம் ஐந்திணை ஒழுக்கம் இடம்பெறாது என்று உரையாசிரியர்கள் கூறிய கருத்து  முரண்.
  • ’செவ்வி’ என்ற  சொல்லின் விளக்கம் இல்லற இன்பம் நிறைவு பெறுதலே.
  • நிலம் மாறலாம்; காலம் மாறலாம்; கருப்பொருள் மாறலாம்; உரிப்பொருள் மாறக்கூடாது.
  • அகச்செம்மையே புறச்செம்மைக்குக் காரணமாக அமையும்.
  • மாட்சியில் பேரியோரை வியத்தல் இல்லை. சிறியோரை இகழ்தலும் இல்லை.புறநானூற்றுக் கருத்து.


                                                                                                                   - பொதுச்செயலாளர்.


  Sunday, August 15, 2010

  சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6

   சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6

  http://www.istockphoto.com/file_thumbview_approve/10623369/2/istockphoto_10623369-number-6.jpg
  நாள்: 05.09.2010 நேரம்: மாலை 6.00 மணி
  இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
  சென்னை 600 078
  (கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

  முன்னிலை
  முனைவர்.இராம. வேணுகோபாலன்
  .(பணிநிறைவு)
  துறைத்தலைவர், தமிழ்த்துறை,
  பச்சையப்பன் கல்லூரி, சென்னை
  .
  சொற்பொழிவாளர்:
  முனைவர். பெ. இலக்குமி நாராயணன்,
  துறைத்தலைவர், தமிழ்த்துறை,
  டி. ஜி. வைஷ்ணவா கலை அறிவியல் கல்லூரி,
  அரும்பாக்கம், சென்னை.

  தலைப்பு: தொல்காப்பியத்தில் பெருந்திணை

  அனைவரும் வருக!! இலக்கியம் பருகி இதம் பெறுக!!

  http://members.home.nl/hickling/images/redrose21.gifhttp://members.home.nl/hickling/images/pinkrose4.gifhttp://members.home.nl/hickling/images/redrose22.gif

  Saturday, August 14, 2010

  ஐந்தாம் முழக்கத்தின் அறிக்கை...

  செந்தமிழ் முழக்கம் - 5   நாள்: 01/08/2010

  நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் ஐந்தாவது சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் 01/08/2010  ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்குத் தொடங்கி 08.30 மணிக்கு முடிவுற்றது. விழாவுக்கு சுமார்  25 பேர் வருகை புரிந்திருந்தனர். விழாவுக்கு வருகை புரிந்திருந்த அனைவரையும் இவ் அமைப்பின் தலைவர் கவிஞர். தஞ்சை. ம. பீட்டர் வரவேற்றார்.

   இவ்வமைப்பின் நிறுவனர் பெரும்புலவர். முனைவர். சி.வெ. சுந்தரம் ஐயா அவர்கள், முன்னிலை வகிக்க வருகை புரிந்திருந்த  முனைவர். பெ. இலக்குமி நாராயணன் அவர்களையும்,  சிறப்புரை ஆற்ற வருகை புரிந்திருந்த  முனைவர்,  அ.மு. மாலதி அவர்களையும், சிறப்பாக பெங்களூருவில் இருந்து இவ்விழாவைக் கண்ணுற வந்திருந்த, இவ்வமைப்பின் செயல்பாடுகளை உலகுக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிற தஞ்சை. சீனிவாசன் அவர்களையும் முறையாக அறிமுகப்படுத்தினார். அத்துடன் உவமைகளுக்கான இலக்கணம், உவமைகள் அமைய வேண்டிய விதம் போன்றவற்றை எடுத்துக் கூறினார்.

  விழாவிற்கு முன்னிலை வகித்த டி.ஜி. வைஷ்ணவா கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். பெ. இலக்குமி நாராயணன் அவர்கள் முன்னுரையாகத்  தொல்காப்பியத்திலும்  சங்க இலக்கியத்திலும்  அமைந்துள்ள அகப்பொருள் மேன்மைகளை எடுத்துக்காட்டி, அகச்செம்மையே மனிதனின் புறவாழ்வு செம்மையாக அமைய முக்கிய காரணம் என்று வலியுறுத்தினார். மேலும்  அற்றம் காக்கும் கருவியான கல்வியைப் பெறுவதில் நாட்டம் உடையவராக இருந்த பண்டையச் சான்றோர்களைக் காட்டி கல்வியின் அவசியத்தையும் எடுத்துக்கூறினார்.    

  சான்றோர் தொடர்பு கவலைகளைத்  தீர்க்கும் என்பதற்குச் சான்றாக  வயது ஆகியும்  மூப்பின்றி தலை மயிர் ஒன்று கூட நரைக்காமல் தான் இருந்தமைக்குக்  காரணம் என்று  சங்கப்புலவன் பிசிராந்தையார் கூறிய காரணங்களுள் ஒன்றான ‘என் நாட்டில் ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் இருப்பதால் நான் கவலையின்றி வாழ்கிறேன்..அதனால் எனக்குத் தலை மயிர் ஒன்று கூட நறைக்க வில்லை”  என்றுரைத்ததை எடுத்துக்காட்டினார்.

  சிறப்புரை ஆற்ற வருகை புரிந்திருந்த சொற்பொழிவாளர்: திருவாசகத்தென்றல், பேராசிரியர், முனைவர்,   அ.மு. மாலதி அவர்கள் சங்க இலக்கியத்தில் உவமைகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.சங்கச் சான்றோர்களால் கையாளப்பட்ட உவமைகள் பொதுவாக வாழ்வியலில் இடம்பிடித்து இருந்தவை. அதீத கற்பனை இல்லாதவை. அத்துடன் இயல்பாக அன்றாடம் நாம் காணும் பொருட்களின் மீது அமைபவை என்றுரைத்தார். 

  பன்றிகள் படுத்து உற்ங்கிக் கொண்டு இருக்கின்றன. அவற்றின் மீது கொன்றை மலர்களின் மகரந்தப் பொடி சிந்தியுள்ளது. அது பார்ப்பதற்கு உரைகல்லின் மீது தங்கத்தின் துகள்கள் அப்பியிருப்பது போல காணப்படுகிறதாம் (அகநானூறு 148 பரணர்) போன்ற உவமைகளைச் சான்று காட்டி விளக்கினார். இது போல சுமார் 20 உவமைகளை விளக்கிக் காட்டினார்.  

  மிக அக்கறையுடன்  உவமைகள் அமைந்த இலக்கியம், பாடல் எண் அனைத்தையும் குறிப்பெடுத்து வந்து விளக்கியமை பயனுள்ள வகையில் அமைந்திருந்தது. 

  இச்சொற்பொழிவில் இருந்து ,  
  1. பன்றி குறித்து அம்மையார் கூறிய உவமை  எந்த இலக்கியத்தில் அமைந்துள்ளது?
  2. அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் என்ற பாடலைப் பாடிய புலவர் யார்?
  3. கல்வி குறித்து பேராசிரியர் இலக்குமி நாராயணன் அவர்கள் சுட்டிக் காட்டிய திருக்குறள் எது?
  ஆகிய மூன்று வினாக்கள் இவ்வமைப்பின் செயலாளர் ப. பானுமதி அவர்களால் எழுப்பப் பட்டது. 

  சரியாகப் பதில் உரைத்த பள்ளி மாணவர் ஒருவருக்கு ஒரு சிற்றுண்டிப் பெட்டகமும், பெரியவர்கள் ஆறு பேருக்குப் புத்தகங்களும் பரிசளிக்கப்பட்டன. 

  சொற்பொழிவின் இடையில் வந்திருந்த அனைவருக்கும் இன்சுவைப் பணியங்கள் வழங்கப்பட்டன.


  இறுதியில் முறையான நன்றியுரை இவ்வமைப்பின் பொதுச்செயலாளர்
  ப. பானுமதி அவர்களால் வழங்கப்பட்டது. அனைவரிடமும்  கையொப்பமும் தொலைபேசி எண்களும் பெற்றுக்கொண்ட பின்பு கூட்டம் இனிதே கலைந்தது.
  - பொதுச்செயலாளர்.

   
   

  Sunday, July 11, 2010

  சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 5  http://members.home.nl/hickling/images/pinkrose4.gif
  நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை

  சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 5

  நாள்: 01.08.2010
  நேரம்: மாலை 6.00 மணி
  இடம்: சிவன் பூங்கா,
  கலைஞர் நகர்
  சென்னை 600 078
  (கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

  முன்னிலை
  முனைவர். பெ. இலக்குமி நாராயணன்,
  துறைத்தலைவர், தமிழ்த்துறை, 

  டி. ஜி. வைஷ்ணவா கலை அறிவியல் கல்லூரி,
  அரும்பாக்கம், சென்னை.
  .
  சொற்பொழிவாளர்:
  திருவாசகத்தென்றல், பேராசிரியர், முனைவர்,   
  அ.மு. மாலதி  எம்.ஏ., எம்..ஃபில்., பிஎச்.டி., 
  பேராசிரியர், தமிழ்த்துறை, இராணிமேரி கல்லூரி, சென்னை. 
  அவர்கள்

  தலைப்பு: சங்க இலக்கியத்தில் உவமைகள்

  அனைவரும் வருக!! இலக்கியம் பருகி இதம் பெறுக!!
  http://members.home.nl/hickling/images/redrose21.gifhttp://members.home.nl/hickling/images/pinkrose4.gifhttp://members.home.nl/hickling/images/redrose22.gif

  Sunday, July 4, 2010

  நான்காம் முழக்கத்தின் அறிக்கை..

  செந்தமிழ் முழக்கம் - 4 நாள்: 04/07/2010

  http://t0.gstatic.com/images?q=tbn:Yw8UJkG4nHur6M:http://www.fishing4fun.co.uk/wp-content/uploads/2008/09/number-4-blue.jpg

  நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் நான்காவது சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் 04.07.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்குத் தொடங்கி 08.30 மணிக்கு முடிவுற்றது. விழாவுக்கு சுமார் ----பேர் வருகை புரிந்திருந்தனர். விழாவுக்கு வருகை புரிந்திருந்த அனைவரையும் இவ் அமைப்பின் தலைவர் கவிஞர். தஞ்சை. ம. பீட்டர் வரவேற்றார்.

  வரவேற்புரையைத் தொடர்ந்து சிறப்புச் சொற்பொழிவாளர் பணி நிறைவு பெற்ற தமிழாசிரியர். புலவர். தங்க ஆறுமுகனார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். உரையில் நெய்தலங்கானல் என்ற பெயர் தோன்றியது ஏன் என விளக்கினார். நெய்தல் என்பது நெசவு (நெய்தல்) என்ற வேர்ச்சொல்லில் இருந்து தோன்றியது. மண் பகுதியை நீரானது குறுக்காக பாய்ந்து செல்வது நெய்தல் என்று பெயர் தோன்ற காரணமாயிற்று என்றும் நெய்தலங்கானல் என்ற சொல் புறநானூற்றில் வழங்கி வருவதாகவும் விளக்கினார். அத்துடன் நரிவெரூஉதலையார் என்ற பெயர் அவருக்கு வழங்கிய காரணம் நரிகளும் அச்சம் கொள்ளும் அளவில் அமைந்த தலையை உடையவராதலால் அப்பெயர் பெற்றார் என்று விளக்கினார். சங்க கால மக்களின் அக ஒழுக்கத்தைப் பற்றிக் கூறும் போது தலைவன் தான் பிரிவு மேற்கொள்வேன் என்று கூற அதனைக் கேட்ட தலைவி
  ”செல்லாமை உண்டெனின் எமக்குரை
  நின்வல்வரவு வாழ்வார்க் குரை”
  செல்வேன் என்று கூறிய மாத்திரத்தில் என் உயிர் போய்விடும். நீ விரைவில் வருவேன் என்று கூறும் செய்தியை உயிரோடு யார் இருக்கிறாரோ அவருக்கு உரை, என்று கூறிய சங்கத் தலைவியின் காதல் ஒழுக்கத்தை எடுத்துக்கூறினார்.
  சங்க கால மக்களின் புற ஒழுக்கத்தைப் பற்றிக் கூறும்போது
  “ பலசான்றீரே பல்சான்றீரே
  பயனின் மூப்பின் பல்சான்றோரே”
  என்று தொடங்கும் நரிவெரூஉதலையாரின் புறநானூற்றுப் பாடலை எடுத்துக்காட்டி வாழுங்காலத்தில் நல்லது செய்யத் தவறினாலும் பரவாயில்லை, ஆனால் நல்லது அல்லாத செய்ல்களைச் செய்வதை விட்டுவிடவும் என்று கூறிய அறிவுரையை எடுத்துக்கூறினார். இது போல சங்கச்சான்றோரின் வாழ்வியல் கருத்துக்களை மிக அழகாக கேட்போர் மனம் கொள்ளும் வகையில் எடுத்துக் கூறினார்.

  சொற்பொழிவின் இடையில் சென்ற மாத முழக்கத்தில் இருந்து கேட்கப்பட்ட இரு வினாக்களுக்குச் சரியான் பதிலை அளித்த திரு. வேணுகோபாலன் அவர்களுக்கு ஒரு கையடக்க திருவாசகப் புத்தகமும்,  பள்ளி மாணவன், இ. பாலாஜி க்கு ஒரு சிற்றுண்டிப் பெட்டகமும் இவ்வமைப்பின் நிறுவனர் பெரும்புலவர். முனைவர். சி. வெ. சுந்தரம் ஐயாவால பரிசாக வழங்கப்பட்டன.
  அப்போதே வந்திருந்த அனைவருக்கும் இன்சுவைப் பணியங்கள் (பிஸ்கட்) வழங்கப்பட்டன.
  பொழிவின் இறுதியில் அடுத்த மாத்திற்கான பரிசுக்குரிய இரு வினாக்கள் இவ் அமைப்பின் பொதுச்செயலாளர் ப. பானுமதி அவர்களால் கேட்கப்பட்டன.
  இவ் அமைப்பின் இணைப்பொதுச்செயலாளர் பேராசிரியர் தாமோதரன் அவர்களால் முறையான நன்றியுரை வழங்கப்பட விழா இனிதே நிறைவேறியது. வழக்கம் போல வந்திருந்த அனைவரிடமும் கையொப்பமும் தொலைபேசி எண்களும் பெற்றுக்கொண்ட பின்பு கூட்டம் இனிதே கலைந்தது.


  -பொதுச்செயலாளர்.

  Sunday, June 27, 2010

  சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கம் - 4
  http://t0.gstatic.com/images?q=tbn:Yw8UJkG4nHur6M:http://www.fishing4fun.co.uk/wp-content/uploads/2008/09/number-4-blue.jpg

  நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை

  சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கம் - 4

  நாள்: 04.07.2010
  நேரம்: மாலை 6.00 மணி
  இடம்: சிவன் பூங்கா,
  கலைஞர் நகர்
  சென்னை 600 078
  (கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

  சொற்பொழிவாளர்
  பணி நிறைவு பெற்ற தமிழாசிரியர்
  புலவர் தங்க ஆறுமுகனார் அவர்கள்.

  தலைப்பு: சங்க இலக்கியத்தில் வாழ்வியல்

  அனைவரும் வருக!! இலக்கியம் பருகி இதம் பெறுக!!
  Wednesday, June 9, 2010

  மூன்றாம் முழக்கத்தின் அறிக்கை..

  http://t2.gstatic.com/images?q=tbn:qYcCO-m_bpotmM:http://www.partydelights.co.uk/images/balloons/foil/foil3g.jpg
  செந்தமிழ் முழக்கம் - 3 நாள்: 06/06/2010


  நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் மூன்றாம் முழக்கம் 06.06.2010 அன்று தமிழ்நாடு, சென்னை, கலைஞர் நகரில் உள்ள சிவன் பூங்காவில் நடைபெற்றது. விழாவில் பணி நிறைவு பெற்ற மதுரை தியாகராயர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் சேதுராமலிங்கம் சிறப்புரை ஆற்றினார். முழக்கத்தைச் செவி மடுக்க பொதுமக்கள் சுமார் அறுபது பேர் வருகை புரிந்து இருந்தனர். நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் செயலாளர் ப. பானுமதி முறையான வரவேற்புரையுடன் முழக்கத்தைத் தொடங்கி வைத்தார். முழக்கத்திற்குப் பணி நிறைவு பெற்ற ஆசிரியர் புலவர் தங்க ஆறுமுகனார் முன்னிலை வகித்தார். அவர் சங்க இலக்கியங்களின் சிறப்பு குறித்தும் நெய்தலங்கானல் என்ற நிலப்பாகுபாட்டின் பெயர்க்காரணம் குறித்தும் சிற்றுரை நிகழ்த்தினார். பின்பு சிறப்புப் பேச்சாளர் முனைவர் சேதுராமலிங்கம் அவர்கள் சொற்சுவை குறித்து நீண்ட உரை நிகழ்த்தினார். முழக்கத்தின் இடையில், வருகை புரிந்தோருக்கு இன்சுவைப் பணியங்கள் (பிஸ்கட்) வழங்கப்பட்டன. இவ்வமைப்பின் பொதுச்செயலாளர் ப. பானுமதி முறையான நன்றியுரையும் அடுத்த கூட்டத்தின் அறிவிப்பும் கூற விழா இனிதே நிறைவுற்றது.  - பொதுச்செயலாளர்.

  சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கம் - 3

  http://t2.gstatic.com/images?q=tbn:qYcCO-m_bpotmM:http://www.partydelights.co.uk/images/balloons/foil/foil3g.jpg
  நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை

  சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கம் - 3

  நாள்: 06.06.2010
  நேரம்: மாலை 6.00 மணி
  இடம்: சிவன் பூங்கா,
  கலைஞர் நகர்
  சென்னை 600 078
  (கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

  சொற்பொழிவாளர்
  மதுரை திர்யாகராயர் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப்பேராசிரியர்
  முனைவர் சேது ராமலிங்கம் அவர்கள்.

  தலைப்பு: சங்க இலக்கியத்தில் சொற்சுவை

  வருக!! இலக்கியம் பருகி இதம் பெறுக!!


  Friday, May 28, 2010

  இரண்டாம் முழக்கத்தின் அறிக்கை..


  http://t1.gstatic.com/images?q=tbn:Jvcx7gBo--_tnM:http://www.balloons.co.uk/shop/images/blue2.jpg


  முழக்கம் - 2 (09/05/2010)  நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கத்தின் இரண்டாம் முழக்கம் இலக்கிய வித்தகர், சித்தர் நெறிச்செம்மல், பெரும்புலவர் சி.வெ. சுந்தரம் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. கூட்டத்தை முன்னின்று நடத்தியவர் கவிஞர். இளங்கண்ணன் . அவர்கள். கூட்டத்திற்கு அருமையான வரவேற்புரை நல்கிச் சிறப்பித்தவர் இவ்வமைப்பின் தலைவர். கவிஞர். தஞ்சை.ம.பீட்டர். சொற்பொழிவில் சங்க கால மக்களின் வாழ்வியல் சிறப்பைப் பெரும்புலவர் எடுத்துக்கூறினார். இல்லறத்தின் அவசியம், அதனை அக்கால மக்கள் அமைத்துக்கொண்டு கடைப்பிடித்த விதம், கற்பின் மாண்பு கடைக்கோடி விலங்குகளிடமும் கடைப்பிடிக்கப் பட்டு வந்த திறம், அதனை மேற்கோள் காட்டி தவறு செய்யும் தலைவனைத் திருத்தும் தோழி கூற்றுப் பாடல் போன்றவை விளக்கப்பட்டன. கூட்டத்தில் இவ்வமைப்பின் நிறுவனர் முனைவர் சி. வெ. சுந்தரம் அவர்கள், இவ்வமைப்பின் தலைவர் கவிஞர் தஞ்சை ம. பீட்டர் அவர்களுக்கும், பொதுச்செயலாளர் ப. பானுமதி அவர்களுக்கும், நிதியாளர் பாலகோபாலன் அவர்களுக்கும், தலைமை ஏற்று விழாவைச் சிறப்பித்த கவிஞர் இளங்கண்ணன் அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி சிறப்புச் செய்தார். விழாவின் இறுதியில் தலைவர் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது. விழா பூஙகாவில் நடை பெற்றமையால் பூங்காவுக்கு வருகை புரிந்த அனைவரும் ஏற்ததாழ நூறு பேர் வருகை தந்தனர். அனைவருக்கும் இன்சுவைப் பணியங்கள் (பிஸ்கட்) வழங்கப்பட்டது. அடுத்த கூட்டத்தின் அறிவிப்புடன் அனைவரும் இனிதே கலைந்தனர்.

  - பொதுச்செயலாளர்

  சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கம் - 2  http://t1.gstatic.com/images?q=tbn:Jvcx7gBo--_tnM:http://www.balloons.co.uk/shop/images/blue2.jpg


  நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை

  சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கம் - 2

  நாள்: 09.05.2010

  நேரம்: மாலை 6.00 மணி

  இடம்: சிவன் பூங்கா,
  கலைஞர் நகர்
  சென்னை 600 078
  (கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

  சொற்பொழிவாளர்
  இலக்கிய வித்தகர், சித்தர் நெறிச் செம்மல்,
  பெரும்புலவர் முனைவர்
  சி.வெ.சுந்தரம் அவர்கள்


  வருக!! இலக்கியம் பருகி இதம் பெறுக!!